முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா. கர்நாடக பா.ஜனதா துணை தலைவராக இருக்கும் இவர், சிகாரிப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளராகவும் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று விஜயேந்திரா சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை காங்கிரஸ் கட்சி சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்த 60 ஆண்டுகளில் நாடு எந்த வளர்ச்சியும் அடையவில்லை. மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் பாதையையே மாற்றிவிட்டார். இன்று உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கிறது.
கொரோனா காலத்தில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி, மக்களை பாதுகாத்தார். கொரோனா காலத்தில் ராகுல்காந்தி பிரதமராக இருந்திருந்தால் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு முன்பாக நம் இந்தியா திவாலாகி இருக்கும்.
கர்நாடகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது. நாட்டின் வளர்ச்சியில் கர்நாடகத்தின் பங்கு முக்கியமானது. மாநில மக்கள் பா.ஜனதாவுக்கு ஆசி வழங்குவார்கள். தற்போதைய நிலையில் எதிர்பார்த்ததை விட பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.