காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்ய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 5-ந்தேதி அதிரடியாக ரத்து செய்தது.
அதோடு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள சீரமைப்புக்கு அம்மாநில முன்னாள் முதல்- மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பிரிவினைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் உள்பட 400 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் மூத்த தலைவர்கள் அனைவரும் ரகசிய இடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தவிர தொலைபேசி, இணையதள சேவை, டி.வி. உள்பட அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
சிறப்பு அந்தஸ்து பறிபோனதால் காஷ்மீர் மாநில மக்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தன. தற்போது அவை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி – கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் பகுதி வாரியாக படிப்படியாக செயல்பட தொடங்கி உள்ளன. இதனால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்ப தொடங்கி இருக்கிறது. இடையிடையே சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் வன்முறைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதற்கும், தலைவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்க கோரி டெல்லியில் சமீபத்தில் தி.மு.க. ஏற்பாடு செய்து இருந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் காஷ்மீருக்கு சென்று மக்களை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த சில தினங்களாக ஓசையின்றி ஆலோசனை நடந்து வந்தது. காஷ்மீருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் சனிக்கிழமை பயணம் மேற்கொள்வார்கள் என்று நேற்று மாலை திடீரென தகவல் வெளியானது.
ராகுல் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், லோக் தந்திரி ஜனதா தளம், தி.மு.க., மதசார் பற்ற ஜனதா தளம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த பயணத்தில் இடம் பெறுவார்கள் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து காஷ்மீர் மாநில அரசு உஷாராகி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. அந்த மாநில அரசின் நிர்வாகம் சார்பில் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
காஷ்மீர் பகுதியில் தற்போதுதான் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு வந்தால் அது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் சென்றால் அது விதிமீறல் ஆகிவிடும். எனவே ஸ்ரீநகருக்கு வருவதை எதிர்க்கட்சித் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
ஆனால் காஷ்மீர் மாநில அரசு அறிவுறுத்தலை எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை. திட்டமிட்டபடி இன்று மதியம் அவர்கள் டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.
ராகுல் தலைமையில் சென்றுள்ள அந்த குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபிஆசாத், ஆனந்த் சர்மா, வேணுகோபால், தி.மு.க.வின் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரசின் தினேஷ் திரிவேதி, தேசியவாத காங்கிரசின் மஜித்மேமன், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஜா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சீதாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா, லோக் தந்திரி ஜனதா தளம் கட்சியின் சரத்யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காஷ்மீர் சென்றுள்ள ராகுல் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குழுவை அம்மாநில அரசு நிர்வாகம் அனுமதிக்குமா? என்பது சந்தேகம் எழுந்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களை சந்திக்க மட்டும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
கட்டுப்பாடுகள் அமலில் உள்ள பகுதிகளுக்கு எதிர்க் கட்சி தலைவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று காஷ்மீர் மாநில நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் 2 தடவை ஸ்ரீநகர் சென்ற போது தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டார்.
அதுபோல இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜாவும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.