டெல்லி வன்முறை தொடர்பாக தாமதம் செய்யாமல் பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்றும், வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன.
ஹோலி பண்டிகை முடிந்த பின்னர் இதுபற்றி விவாதிக்கப்படும் என அவைத்தலைவர் கூறியதை எதிர்க்கட்சிகள் ஏற்காமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்குகிறது.
அமளியில் ஈடுபட்ட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனினும் எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். கூட்டத்தொடரின் 5வது நாளான இன்றும், இதே கோரிக்கையை முன்வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனனர்.
மாநிலங்களவை இன்று கூடியதும், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, மகளிர் தினத்தை நினைவு கூர்ந்தார். சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். மகளிர் தினமான மார்ச் 8 அன்று விடுமுறை என்பதால் இன்று மகளிர் தினம் தொடர்பான கருத்தை முன்வைத்தார்.
அதன்பின்னர், கொரோனா வைரஸ் தொடர்பாக வியாழக்கிழமை சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் அவையில் முன்வைத்த அறிக்கையை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும், ஏனென்றால் இது பொது அக்கறை கொண்ட விஷயம் என்று அவைத்தலைவர் தெரிவித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு பகுதி ஊடகங்கள் அந்த அறிக்கையை வெளியிடுவதில் கவனம் செலுத்தவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தார்.
அதன்பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், டெல்லி வன்முறை விவகாரம் தொடர்பாக முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். முதலில் அவை நடவடிக்கைள் நடைபெற அனுமதிக்கும்படி வலியுறுத்தினார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கவில்லை. எனவே, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். இனி ஹோலி பண்டிகை முடிந்து 11-ம் தேதி அவை மீண்டும் கூடும்.
இதேபோல், மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சி உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.