டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றம் முடங்கியது. மூன்றாவது நாளாக இன்றும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்றைய அலுவல்களை ஒத்திவைத்து, டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஏற்கவில்லை.
டெல்லி வன்முறையை தீவிர பிரச்சினையாக கருதி பரிசீலனை செய்வதாகவும், ஹோலி விடுமுறைக்கு பிறகு அவையில் விவாதிக்கப்படும் என்றும் அவைத்தலைவர் கூறினார்.
அவைத்தலைவரின் முடிவை ஏற்காத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உடனடியாக விவாதிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். சில உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவி.