எதிர்க்கட்சிகளின் விருப்பம் பீகார் மேம்பாலம் போல் இடிந்து விழும் – அமைச்சர் ஸ்மிரிதி இரானி தாக்கு
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள திட்டமிட்டு வருகின்றன. இது தொடர்பாக விவாதிப்பதற்காக வருகிற 23-ந்தேதி பீகாரில் எதிர்க்கட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இடதுசாரி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா குறைகூறியுள்ளது.
இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியுமான ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நிற்க முடியாது என்பதால், தங்களுக்குள்ளேயே ஆதரவு பெறுவதற்கு விரும்புகின்றனர்.
இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த இடத்துக்கு (பீகார்) செல்கின்றனர். ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கான அவர்களது விருப்பமும், அந்த பாலத்தைப்போலவே 2024-ல் இடிந்து விழும்’ என்று தெரிவித்தார்.
பீகாரில் கங்கை நதியின் குறுக்கே சுமார் ரூ.1,750 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட பாலம் சமீபத்தில் 2- வது முறையாக இடிந்து விழுந்தது. இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதைப்போல அமெரிக்காவில் ராகுல் காந்தியின் பேச்சுகள் குறித்தும் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார்.
அன்புக்கடை நடத்தி வருவதாக ராகுல் காந்தி கூறி வரும் நிலையில், இந்து தர்மத்தை அவமதித்தல், சீக்கிய படுகொலை, இந்திய எதிரிகளுடன் கைகோர்த்தல், இந்திய ஜனநாயகத்தை சிறுமைப்படுத்த வெளிநாட்டினரை இழுத்தல் போன்றவைதான் ராகுல் காந்தியின் அன்புக்கான அர்த்தமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஸ்மிருதி இரானி பட்டியலிட்டார்.