எதிர்கால கேப்டன்களை உருவாக்குவதில் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தொலைநோக்கு பார்வையில்லை – முன்னாள் கிரிக்கெட் வீரர் தாக்கு

லண்டன் ஓவல் மைதானத்தில் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது. இந்த தோல்வியால் கேப்டன் ரோகித் சர்மா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. இந்நிலையில் எதிர்கால கேப்டனை உருவாக்குவதில் தேர்வுகுழு உறுப்பினர்களுக்கு தொலைநோக்கு பார்வையில்லை என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக நான் பார்த்த சில தேர்வாளர்களுக்கு தொலைநோக்கு பார்வையோ, விளையாட்டை பற்றிய ஆழமான அறிவோ அல்லது கிரிக்கெட் உணர்வோ இல்லை. 2021-ம் ஆண்டு பெரும்பாலான சீனியர் வீரர்கள் இங்கிலாந்தில் ஆடிய போது இலங்கை சுற்றுப்பயணத்தில் ஷிகர் தவானை கேப்டனாக நியமித்தனர். இது போன்ற தொடர்களில் தான் எதிர்கால கேப்டனை உருவாக்க முடியும். அதுதான் சிறந்த வழி.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்த இளம் வீரரையும் கேப்டனாக செயலாற்றும் அளவிற்கு உருவாக்கவில்லை. ஐ.பி.எல். போட்டியை நடத்தினால் மட்டும் போதாது. மாற்று வீரர்கள் யார் தயாராக இருக்கிறார்கள்? ஐ.பி.எல். மூலமாகவும், தொலைக்காட்சி உரிமம் மூலமாகவும் கோடிகளை குவிப்பது மட்டுமே சாதனையல்ல.

இவ்வாறு வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports