அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர். கடந்த 1973-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெரு வீதியில் நின்றபடி நியூயார்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதுதான் முதல் செல்போன் அழைப்பாகும்.
செங்கல் போன்று காட்சி அளித்த அந்த செல்போன் எதிர்காலத்தில் உலக தகவல் தொடர்பு சாதனமாக மாறி பெரும் புரட்சியை ஏற்படுத்த போகிறது என்பதை மார்ட்டின் கூப்பர் அப்போது அறிந்திருக்கவில்லை. செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரை நூற்றாண்டு காலகட்டத்தில் செங்கல் போன்று காட்சி அளித்த செல்போன் இப்போது கையடக்க கருவியாக மாறி போனது.
அதுமட்டுமின்றி தகவல் தொடர்பு என்ற எல்லையை தாண்டி அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் கலை களஞ்சியமாகவும் மாறிவிட்டது. தொலைதொடர்புக்காக மட்டுமே தொடங்கப்பட்ட செல்போன் இன்று உலக தகவல்களையும் அறிந்து கொள்ளும் சாதனமாக மாறிபோனது. அதோடு செல்போன் மூலம் பல தீய செயல்களும் நடக்கிறது. ஆபாச படங்களை பிறருக்கு தெரியாமல் பதிவு செய்வது, உரையாடல்களை பதிவு செய்வது, அந்தரங்கங்களை அம்பலத்துக்கு கொண்டு வருவது போன்றவையும் நடக்கிறது.
செல்போன் கண்டுபிடித்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பருக்கு இப்போது 94 வயதாகிறது. செல்போனின் இப்போதைய நிலை குறித்து அவரிடம் கேட்டபோது, செல்போனின் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன். என்றாலும் அதன் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இனிவரும் காலங்களில் தனிநபர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பதிவு செய்யப்படும், இதனால் சுதந்திரம் பறிபோகும் என்றார்.