X

எடியூரப்பாவின் கனவு பலிக்காது! – கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா

மைசூரு மாவட்டம் வருணா தொகுதிக்கு உட்பட்ட சுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோவிலில், சுத்தூர் மடம் சார்பில் ஆண்டுத்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த பூஜையில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு முதல்-மந்திரி பதவி மீது ஆசை அதிகரித்துவிட்டது. அதனால்தான் அவர் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், அவருடைய கனவு பலிக்காது. கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது.

அதைத்தான் நாங்கள் செய்தோம். பா.ஜனதாவினர் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஆளும் கூட்டணி அரசில் உள்ள குறைகளை கண்டறிந்து சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம். குறிப்பாக கூட்டணி அரசின் தவறுகள், ஊழல்களை சுட்டிக் காட்டலாம். அதைவிடுத்து கூட்டணி அரசை கவிழ்ப்பதற்காக பொய் பிரசாரம் செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் எத்தனை சதித்திட்டங்கள் போட்டாலும், என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களால் கூட்டணி அரசை கவிழ்க்க இயலாது.

வருகிற 8-ந் தேதி கர்நாடக மாநில பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்வார். அதை பா.ஜனதாவினரால் தடுக்க முடியாது. காங்கிரசில் அதிருப்தியாளர்கள் யாரும் கிடையாது. காங்கிரசில் அனைவரும் சமம் தான்.

இவ்வாறு பரமேஸ்வரா கூறினார்.