Tamilசெய்திகள்

எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு திரளும் ஆதரவாளர்கள் – பலவீனமாகும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் அவர்களை சந்தித்து ஆதரவு கூறி வந்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நாட்கள் செல்ல செல்ல வளர்பிறை போல ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேய்பிறை போல் அவருக்கு ஆதரவாளர்கள் குறைந்து வருகிறார்கள். நேற்றும், இன்றும் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு ஆதரவாளர்கள் கூட்டம் திரண்டு வந்தபடியே இருந்தனர்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் ஆகியோர் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தரப்பில் முக்கிய நிர்வாகிகளாக வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்பட குறிப்பிட்ட சிலரே ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த வேளச்சேரி அசோக் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படக்கூடாது. ஊர் கூடி தேர் இழுப்போம், அனைவரும் ஒன்று கூடி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த சட்டமன்ற தேர்தலை வென்று கோட்டையை பிடிப்போம். அம்மாவின் வழியில் அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சியை வழங்குவோம்.

அனைவரும் ஒற்றைத் தலைமையை ஆதரிப்போம். எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்துவோம்.

ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் கிரீன்வேஸ் இல்லத்தில் இன்றும் காலையில் இருந்தே ஏராளமான மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கிளை செயலாளர்கள் என ஏராளமான தொண்டர்கள் ஒன்று திரண்டு ஆதரவு தெரிவித்ததால் அந்த பகுதி திருவிழா கூட்டம் போல் காணப்பட்டது. அனைவரும் பூங்கொத்து கொடுத்தும், சால்வை, மாலை அணிவித்தும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அவர்களை தோளில் தட்டி கொடுத்து நன்றி தெரிவித்ததுடன் அனைவரும் ஒன்று கூடுவோம் என்று உற்சாகப்படுத்தினார்.

நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு 2700 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் இன்றே சென்னை வர தொடங்கி உள்ளனர்.

இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களிலும் அறைகள் நிரம்பி உள்ளன.