Tamilசெய்திகள்

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு 2 நாளில் வெளியாகிறது

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்கிறது.

கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் நாளை மறுநாள் (1-ந்தேதி), அல்லது 2-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக கடந்த முறை சென்னை ஐகோர்ட்டில் அளித்த உத்தரவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்துதான் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த முறை இவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்குமா? இல்லை மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாகவே தீர்ப்பு வெளியாகுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக போகிறது என்கிற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் களத்திலும் இந்த தீர்ப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.