X

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் தற்போது செயல்படுகிறது. 11-ந்தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து அவர் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளை நீக்கினார். தன்னையும் ஆதரவாளர்களையும் நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கினார்.

இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சி நிர்வாகிகள் மீது மாறி மாறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்துள்ளார். கட்சியின் தலைமை அலுவலகம் இருவரின் மோதலால் பூட்டி சீல் வைக்கப்பட்டதோடு கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைத்த சீலை அகற்றக்கோரி தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். இதனால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது வீட்டில் கூட்டத்தை நடத்துவதற்கு முதலில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு வழங்கியுள்ள வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என அவர் கடிதம் எழுதி இருந்தார்.

இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை தனியார் நட்சத்திர ஓட்டலில் நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். அடையாறு கிரவுண் பிளாசா நட்சத்திர ஓட்டலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் நாளை மறுநாள் நடை பெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை முறையாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளது.

மேலும் சட்டசபையில் எதிர்கட்சி துணை தலைவர் பதவி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. துணை தலைவர் நியமனம் மற்றும் சபாநாயகருக்கு கடிதம் கொடுப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணிக்குள் ஓட்டலுக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ளார். அவரும் நாளை பிற்பகல் சென்னை வந்தடைகிறார்.