அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த மனுவை இன்று விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.