ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் அவர் தேர்வு செய்யப்பட்டதோடு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்தர நாத் எம்.பி.யையும் நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகள் நியமித்தல், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள தொடங்கினார்.
இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். ரவீந்திர நாத் எம்.பி. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் இனி அ.தி.மு.க. தேனி பாராளுமன்ற உறுப்பினர் இல்லை எனவும் இனிவரும் காலங்களில் அ.தி.மு.க. உறுப்பினர் என்று பாராளுமன்ற நடவடிக்கைகளில் பயப்படுத்த அனுமதிக்க வேண்டாம் எனவும் அக்கடிதத்தில் கூறி இருந்தார்.
இதையடுத்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கடந்த 11-ந்தேதி அ.தி.மு.க.வின் ஒரு சில பொறுப்பாளர்கள் பொதுக்குழு கூட்டத்தை கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது ஒப்புதல் இல்லாமல் கூட்டியது கட்சி விதிகளுக்கு எதிரானது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதனால் கட்சிகளின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை கட்சி பதவியில் இருந்து நீக்கி விட்டேன். அவர்கள் கூட்டிய சட்ட விரோத கூட்டங்கள், நிகழ்வுகள், கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடான கூட்டங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தை இடைக்கால பொதுச்செயலாளராக தன்னைத் தானே அறிவித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி முதல் நிலை தேர்தல் இருந்து நீக்கி தங்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பது எனது கவனத்திற்கு வந்தது.
அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லை. அதனால் அது செல்லுபடி ஆகாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக ரவீந்திர நாத்தை பொய்யான குற்றச்சாட்டு கூறி நீக்கியதாக தெரிவித்து உள்ளனர். இவை எதுவும் கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை. ஆதலால் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எந்த தொடர்பு மேற்கொள்ள வேண்டாம், எவற்றையும் நடைமுறை படுத்த வேண்டாம். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.