எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்கான இயக்கமாக தொடங்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக மக்களுடைய பேராதரவை பெற்று 3 முறை மக்களின் மனம் கவர்ந்த முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார். அவரது மறைவுக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மா பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம் அ.தி.மு.க.வை வழிநடத்தினார். இந்த இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்ற சவால்களை முறியடித்தார். 17 லட்சம் தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். அவர் 16 ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்-அமைச்சராக நல்லாட்சி தந்தார்.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முதல்-அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆரின் நோக்கத்தை 100 சதவீதம் நிறைவேற்றும் வகையில் மக்கள் நல திட்டங்களை தொலைநோக்கு திட்டங்களாக அர்ப்பணித்தார். இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்த போது அதை வெல்வதற்கு இன்று தமிழகத்தில் இருக்கின்ற எந்த கட்சியும் இல்லை என்ற நிலையை புரட்சித் தலைவியும், எம்.ஜி.ஆரும் உருவாக்கி தந்தார்கள். சின்னச்சின்ன பிரச்சினைகளால் எங்களுக்குள் கருத்துவேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையில் தான் தி.மு.க. ஆளுகின்ற கட்சியாக வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் அந்த சூழ்நிலை நிலவி இருக்கிறது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் அம்புகளாக, அம்மாவின் பிள்ளைகளாக அவர்கள் வகுத்து தந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.
எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் வந்த காரணத்தால் சமீபத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகளால் இன்று அ.தி.மு.க.வுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அசாதாரண சூழ்நிலைகளை எங்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட வேண்டும். கழகத்திற்காக எம்.ஜி.ஆர்., அம்மா செய்த தியாகங்களை எண்ணி மீண்டும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆளுகின்ற பொறுப்பை மக்களுக்கு சேவையாற்றுகின்ற பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு உறுதியாக நின்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்பதை நான் இதயப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு பாதிப்பாக இருந்தது என்று எந்த காலத்திலும் செல்ல மாட்டேன். எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளின் காரணமாக இன்றைக்கு அ.தி.மு.க.வில் இருக்கின்ற 1½ கோடி தொண்டர்களுடைய மனதிலும் நல்லாட்சி தந்த எம்.ஜி.ஆர்., அம்மா மீது பாசம் கொண்ட தமிழக மக்களும், இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்று ஒருமித்த கருத்தோடு இருக்கிறார்கள்.
பல பகுதிகளில் இருந்து இந்த செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டே இருக்கிறது. எனவே இதற்கு முன்னால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் யாரும் இனிமேல் அதை மனதிலே வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு கழகத்தின் ஒற்றுமையையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன். எம்.ஜி.ஆரை தி.மு.க.வில் இருந்து வெளியேற்றியதன் காரணமாகத்தான் அ.தி.மு.க. உருவானது. அதன் பிறகு தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என்ற நிலை வரும் போது அ.தி. மு.க. தான் அதிகமான தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பை தமிழக மக்களிடம் பெற்றது.
இன்று தி.மு.க. ஆளுகின்ற நிலை இருக்கிறது. அ.தி.மு.க.வை பொறுத்த வரை ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சிக்கு உரிய எதிர்க்கட்சியாக அவர்கள் மக்கள் விரோத போக்கை கையில் எடுக்கின்ற போது அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் அரசியல் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களோடு 50 ஆண்டு காலம் இருவரும் அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அம்மா காலமான பிறகு 4½ ஆண்டு காலம் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த பொழுதும், அவரோடு முழு ஒத்துழைப்போடு அனைவரும் பயணித்து இருக்கிறோம். கழகத்தின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த ஒற்றுமை நிலை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம், கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.