Tamilசெய்திகள்

எடப்பாடி பற்றி அவதூறாக பேசினேனா? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து குறித்து பேசிய அமைச்சர் உதியநிதி ஸ்டாலின், கடந்த 7-ம் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவித்து இருப்பதாக அவரை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான மனுவில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார் என்றும், அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சனாதனத்தை எதிர்க்கும் பணியில் செய்தியாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருவதற்கு எனது நன்றிகள். நான் எடப்பாடி பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசவில்லை. சனாதனத்திற்கு எதிராக பேசுவதை அவர் அவ்வாறு எடுத்துக் கொள்கிறாரா என்று தெரியவில்லை,” என்று தெரிவித்து உள்ளார்.

முன்னதாக இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் முன்னோடியாகத் திகழும் வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் உலக அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியத்தகு சாதனைகள் படைத்த பள்ளி மாணவர்களை கவுரவிக்கும் வகையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, பத்மவிபூஷன் விருதாளரும், புகழ்பெற்ற செஸ் வீரருமான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு, உலக அளவில் 8-வது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர் 1 செஸ் விளையாட்டு வீரருமான குகேஷ், ஆசியாவின் 2–வது இடம் பிடித்த டென்னிஸ் வீராங்கனை ஹரிதா ஸ்ரீ, உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் செஸ் பயிற்சியாளர் வேலவன் ஆகியோரது சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினர்கள், செஸ் சாம்பியன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருமிதம் சூழ்ந்த இந்த நிகழ்வில் வேலம்மாள் நெக்ஸஸ் நிர்வாகம் சார்பில் சர்வதேச அளவில் சாதனை படைத்த செஸ் சாம்பியன்களுக்கு ரூ.60 லட்சம் பரிசுத்தொகையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.