X

எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ தொற்று இல்லை – மருத்துவர் தகவல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த பெண்ணின் கருவில் இருந்த குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என கருதப்பட்டது.

இதையடுத்து பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் குழந்தைக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. ரத்த மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அந்த குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சாத்தூர் பெண் கூறும்போது, என் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லை என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். இதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு மருத்துவத்துறை டாக்டர்கள் கூறும் போது, சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு ஓராண்டு, 18 மாதங்கள் என்கிற இடைவெளியில் ரத்த பரிசோதனைகள் நடத்தப்படும். அதில் கிடைக்கப்போகும் விவரங்களின் அடிப்படையில் தான் அந்த குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து உறுதியாக தெரிவிக்க இயலும்.

மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதாவிடம் கேட்ட போது, சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. அந்த குழந்தையின் உடல் எடையும் தற்போது 3.2 கிலோ என்கிற அளவில் அதிகரித்து உள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். எனவே சாத்தூர் பெண் அடுத்த வாரம் குழந்தையுடன் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றார்.

Tags: south news