X

எங்கள் வீரர்களை சவாலான விஷயங்களை செய்ய வைப்போம் – மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியாளர்

ஐபிஎல் அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆர்வமாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு சிறந்த பினிஷராக உள்ளனர். கடைசி நேரத்தில் ஒரு ஓவருக்கு 20 ரன்களுக்கு மேல் தேவை என்றாலும் ஆட்டத்தை சிறப்பாக முடிக்கக்கூடிய தகுதி பெற்றவர்கள். மேலும், பந்து வீச்சிலும் அசத்தக்கூடியவர்கள்.

ஹர்திக் பாண்ட்யா முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன்பின் சுமார் ஒரு வருடம் விளையாடாமல் இருந்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் களம் இறங்க இருக்கிறார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் வொர்க் லோடு குறித்து மனதில் வைப்பது அவசியம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்ட்யா காயத்திற்குப் பிறகு விளையாட வந்துள்ளார். நாங்கள் அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வலைப் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டார். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக பாண்ட்யா சகோதரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். இது அணிக்கு அதிக எனர்ஜியை கொண்டு வரும்.

ஹர்திக் பாண்ட்டியாவை நாங்கள் முன்னதாக மாறுபட்ட ரோலில் பயன்படுத்தினோம். அதேபோன்றுதான் தற்போதும் எதிர்பார்க்கிறோம். அதேபோல் மற்ற சில வீரர்களையும் நாங்கள் அதில் ஈடுபடுத்த முடியும். அதற்கான வாய்ப்பு வரும்போதெல்லாம், நாங்கள் அவர்களிடம் போட்டியை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்வோம்.

இது ஹர்திக் பாண்ட்யா மட்டும் செய்ய வேண்டியதில்லை. ஆனால், இது அவரின் பொறுப்புகளில் ஒன்று. ஆகவே, எங்கள் முகாமில் உள்ள வீரர்களை மாறுபட்ட வழிகளில் பயன்படுத்தி சவாலான ரோலை செய்ய வைக்க முயற்சி செய்ய விரும்புகிறோம். அதை நாங்கள் தொடர்ச்சியாக செய்ய இருக்கிறோம்’’ என்றார்.