X

எங்கள் பலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் – பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் புள்ளி பட்டியலில் முன்னணியில் உள்ள டெல்லி கேப்பிட்டல்சுக்கு அதிர்ச்சி அளித்து 4-வது வெற்றியை பெற்றது.

இதில் டெல்லி அணி நிர்ணயித்த 165 ரன் இலக்கை பஞ்சாப் அணி 19 ஓவர்களில் எட்டிப்பிடித்து முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. நிகோலஸ் பூரன் அரைசதம் அடித்து (6 பவுண்டரி, 3 சிக்சருடன் 53 ரன்) வெற்றிக்கு உதவினார். 106 ரன்கள் குவித்த டெல்லி வீரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘எங்கள் அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது இதய துடிப்பு புதிய உச்சத்துக்கு எகிறுகிறது. இந்த ஆட்டத்தை 19-வது ஓவரிலேயே வெற்றிகரமாக முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை அணிக்கு எதிராக இரண்டு சூப்பர் ஓவர் முடிவில் கிடைத்த வெற்றிக்கு பிறகு அன்றையதினம் இரவில் நீண்ட நேரம் தூங்கவில்லை. இந்த பரபரப்பு, நெருக்கடியான சூழலுக்கு முன்பே அதாவது சூப்பர் ஓவருக்கு முன்னதாகவே எப்படி போட்டியை முடித்து இருக்க வேண்டும் என்பது குறித்து அதிகமாக சிந்தித்தேன்.

இந்த ஆட்டத்தில் 6 பேட்ஸ்மேன் மற்றும் ஒரு ஆல்-ரவுண்டருடன் ஆடியது போட்டியை விரைவாக முடிக்க உதவியதாக நினைக்கிறேன். ஒவ்வொரு அணியும், நிலைத்து நின்று ஆடும் பேட்ஸ்மேன் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த விஷயத்தை நாங்கள் சரிசெய்ய வேண்டும். சீனியர் வீரரான முகமது ஷமி ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். மேக்ஸ்வெல் நன்றாக பேட்டிங் செய்தார். அவருக்கு நாங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அடுத்து வரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறோம்’ என்றார்.

தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘இந்த தோல்வி நாங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட விடுக்கப்பட்ட எச்சரிக்கை போன்றதாகும். இனிமேல் நாங்கள் கடினமான சூழ்நிலையையும், சவால்மிக்க அணிகளையும் எதிர்கொள்ள இருக்கிறோம். கடந்த காலத்தில் மிகவும் அருமையாக விளையாடி இருக்கிறோம். அதனை மறந்து விட்டு நாங்கள் முன்நோக்கி செல்ல வேண்டியது அவசியமானதாகும். வரும் ஆட்டங்களில் நாங்கள் மிகவும் சுதந்திரமாகவும், அதிக பொறுப்புடனும் செயல்பட வேண்டும். அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற இன்னும் ஒரு ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். ஷிகர் தவான் விளையாடி வரும் விதம் உற்சாகம் அளிக்கிறது. பேட்ஸ்மேனாக அவர் எங்களுக்கு நல்ல அடித்தளம் அமைத்து தருகிறார். நாங்கள் எங்களுடைய பங்கை நன்கு அறிந்து செயல்பட வேண்டும். பவர்-பிளேயில் தவானுக்கு, டாப் வரிசை வீரர்கள் யாராவது துணையாக நின்று இருந்தால் அதிக ரன் குவித்து இருக்கலாம். நாங்கள் 10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன்.

தோல்வியை மறந்து எங்களது பலம் என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். நாங்கள் சில ரன்-அவுட் மற்றும் கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். பயிற்சியின் போது இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.