வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது.
ரிஷப்பண்ட் 69 பந்தில் 71 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிரேயாஸ் அய்யர் 88 பந்தில் 70 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேதர்ஜாதவ் 35 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
கோட்ரெல் கீமோபவுல், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட்டும், போல்லார்ட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
288 ரன் என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி பின்னர் விளையாடியது.
அந்த அணி இந்த இலக்கை 13 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. வெஸ்ட்இண்டீஸ் 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹெட்மயர், ஷகி ஹோப் ஆகியோர் சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். ஹெட்மயர் 106 பந்தில் 139 ரன்னும் (11 பவுண்டரி, 7 சிக்சர்), ஹோப் 151 பந்தில் 102 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். தீபக் சாஹர், முகமதுஷமி தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-
நானும், ரோகித்சர்மாவும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இரண்டு இளம் வீரர்களுக்கு (ரிஷப்பண்ட், ஷிரேயாஸ் அய்யர்) நல்ல வாய்ப்பு கிடைத்தது. மெதுவான இந்த ஆடுகளத்தில் இருவரும் சிறப்பாக ஆடினார்கள்.
மெதுவான பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தது. கேதர்ஜாதவ் பந்து வீசினார். ஆனால் மின்னொளியில் விளையாடுவது என்பது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
என்னை பொறுத்தவரை வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் உண்மையிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹெட்மயர் பிரமாதமாக ஆடினார். ஹோப்பும் நன்றாக விளையாடினார்.
ஆனால் வேகப்பந்து வீரர்கள் சிரமப்பட்டார்கள். பந்தை பிடித்து நேர்த்தியாக வீச திணறினார்கள். இது ஒரு கடுமையான மாற்றம் இல்லை. ஆனால் சிறிய அளவில் மாற்றம் இருந்தது. ஒட்டு மொத்தத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எங்களை விட நன்றாக ஆடினார்கள்.
இவ்வாறு கோலி கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் ஆட்டம் வருகிற 18-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.