X

எங்களை தாண்டி தான் கோட்டைக்கு செல்ல வேண்டும் – முதலமைச்சரை மிரட்டும் அண்ணாமலை

பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோவை சிவானந்தா காலனியில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:

இந்து மதத்தை இழிவாக ஆ.ராசா பேசுவது இது புதியதல்ல. தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று பேசிய போது பெரிதும் மக்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. தற்போது அரசியல் களம் மாறி இருக்கிறது. நாங்கள் தான் சுயமரியாதைக்காரர்கள். பா.ஜ.க.வுக்கு பொருத்தமான வார்த்தை சமூகநீதி, சுயமரியாதை. ஆனால் பா.ஜ.க. மதவாத கட்சி என்றும், ஏதாவது சொல்லி ஆட்சிக்கு வரபார்க்கிறார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார்.

தமிழகத்தில் 1.10 கோடி பேர் மதுவிற்கு அடிமையாகி இருப்பதில் இருந்து வெளிக்கொண்டு வரவும், அரசு அலுவலகங்களின் லஞ்சம், கனிமவள கொள்ளைகளை தடுக்கவுமே நாங்கள் ஆட்சிக்கு வர நினைக்கிறோம். கோவையின் பொறுப்பு அமைச்சர் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்.

மற்றொரு அமைச்சர் மேடையில் சாதி பெயரை கூறி பெண்ணை அழைக்கிறார். பா.ஜ.க. தொண்டர்கள் மீது கை வைத்த காவல் துறையினருக்கு, நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் ஓய்வு காலத்தில் உங்களுக்கு ஓய்வூதியம் வரவில்லை என்றால் நாங்கள் பொறுப்பல்ல.2024-ல் நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல.

நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லையென்றால் மாற்றப்படுவீர்கள். முதலமைச்சரின் வீட்டை பா.ஜ.க. தொண்டர்கள் முற்றுகையிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. எங்களை தாண்டி தான் கோட்டைக்கு செல்ல வேண்டும். முதலமைச்சர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். நடுநிலையாக இருந்து 5 ஆண்டுகளை முழுமையாக ஆட்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.