எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது – கமல்ஹாசன் பதிவு

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர் தான் இந்தியாவை விடுவித்தார்.

அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார். நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம், அரசியல் சாசனம் உருக்கொண்டதன் 75ஆம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று பாராளுமன்றத்தின் மரியாதைமிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

முன்னதாக, நேற்றுமுன்தினம் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார். இந்த கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools