ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வங்களாதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முன்னதாக கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை வீசப் போவது அனுபவம் மிக்க ஷமியா அல்லது அர்ஷ்தீப் சிங்கா என ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் வழங்கினார். தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அர்ஷ்தீப், யார்க்கர் பந்து வீச்சை பயன்படுத்தினார்.
இதனால் அந்த ஓவரில் வங்காளதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியாவின் வெற்றி குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சமயங்களில் டெத் ஓவர்களை வீச தயாராக இருக்கும்படி அர்ஷ்தீப் சிங்யிடம் ஏற்கனவே கூறியிருந்தாக தெரிவித்தார்.
ஒரு இளம் வீரர் இதை செய்வது அத்தனை சுலபம் கிடையாது, அதற்கான நாங்கள் அவரை தயார்படுத்தினோம், கடந்த 9 மாதங்களாக அர்ஷ்தீப் சிறப்பாக அதை கையாளுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். இனியும் தொடர்ந்து அவர் சரியாக செய்வார் என்றும் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் நேற்றைய போட்டியில் தங்களது பீல்டிங் அற்புதமாக இருந்ததாகவும், சில கேட்சுகள் சிறப்பாக அமைந்தன. அழுத்தமான சூழலில் கேட்சுகளை பிடிப்பது எங்களது வீரர்களின் திறனை வெளிப்படுத்துகிறது, எங்களது பீல்டிங்கில் எனக்கு எந்த சந்தேகமும் இருந்ததில்லை என்றும் ரோகித் குறிப்பிட்டுள்ளார்.