Tamilசெய்திகள்

எகிப்து நாட்டில் இருந்து கோயம்பேடுக்கு வந்த வெங்காயம்!

தமிழகத்தில் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.200 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.150 வரையிலும் விற்கிறது.

இதனால் ஏழை-எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதித்தது. இதனால் வரத்து குறைந்து வெங்காயத்தின் விலை உச்சத்திற்கு சென்றது.

நவம்பர் மாதம் முதல் இந்த விலையேற்றம் காணப்படுகிறது. இதனால் வீடுகளிலும், ஓட்டல்களிலும் வெங்காயம் பயன்பாடு குறைந்தது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும் 70 லாரிகளில் வெங்காயம் வருவது வழக்கம். விளைச்சல் பாதிக்கப்பட்டதால் 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்தது.

வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து 1 லட்சம் டன் இறக்குமதி செய்துள்ளது. சென்னை, திருச்சி, கோவை போன்ற நகரங்களுக்கு எகிப்து வெங்காயம் வந்துள்ளது.

கப்பல் மூலம் மும்பைக்கு வந்த எகிப்து வெங்காயம் அங்கிருந்து லாரிகள் மூலம் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டது. 40 டன் எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பு கலரில் இருப்பதால் வாங்குவதற்கு தயங்குகிறார்கள். ஆனாலும் அந்த வெங்காயம் மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள வியாபாரிகள் அந்த வெங்காயத்தை வாங்கினால் விற்காது என்று கருதி தயக்கம் காட்டினார்கள்.

பொதுமக்கள் வாங்க தயங்கினாலும் ஓட்டல்களுக்கு மொத்தமாக இதனை வாங்கி சென்றனர். வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதால் வெங்காயம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

இதுகுறித்து பெரிய வெங்காய மொத்த வியாபாரி ஜான் வல்தாரிஸ் கூறியதாவது:-

எகிப்து வெங்காயம் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வெங்காயம் நம் நாட்டின் வெங்காயத்தை ஒப்பிடும்போது தரம் குறைவாக உள்ளது.

மேலும் கருஞ்சிவப்பு கலரில் எகிப்து வெங்காயம் இருப்பதால் வியாபாரிகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஓட்டல் பயன்பாட்டிற்கு மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள் கொஞ்சமாக கொள்முதல் செய்கின்றனர். எதிர்பார்த்த அளவிற்கு எகிப்து வெங்காயத்திற்கு வரவேற்பு இல்லாததால் விற்பனை மந்தமாக உள்ளது.

பெரிய வெங்காயம் தரம் வாரியாக பிரித்து கிலோ ரூ. 30 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. ரூ.150, ரூ.180, ரூ.200 என விற்கப்பட்ட பெரிய வெங்காயம் இப்போது ரூ.100, ரூ.110 ஆக குறைந்துள்ளது.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காயம் வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. நேற்றை விட இன்று அதிகளவு வெங்காயம் வந்துள்ளது. 48 லாரிகளில் வெளிமாநில வெங்காயம் வந்துள்ளதால் விலை குறைகிறது. பொங்கல் பண்டிகை காலத்தில் இயல்பான விலைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரிய வெங்காயம் விலை குறைந்து வரும் நிலையில் சாம்பார் வெங்காயம் விலை இன்னும் குறையவில்லை. கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.120 முதல் ரூ.180 வரை (மொத்த விலை) விற்கப்படுகிறது.

சில்லறை விலையில் ரூ.200-க்கு மேல் விற்கப்படுகிறது.

இந்த வாரம் உழவர் சந்தைகளில் பெரிய வெங்காயம் விலை குறைந்து ரூ.120 முதல் 150-க்கும், வெளி மார்க்கெட்டில் ரூ. 130 முதல் 180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் தற்போது ரூ. 100 முதல் 130-க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *