Tamilசெய்திகள்

ஊழியர்களை பணிக்கு வர விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களுக்கு அபராதம்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ( என்.ஐ.டி.) கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் என்.ஐ.டி. வளாகத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நடைமுறைக்கு மாணவர்களில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மார்ச் 20-ந் தேதி அன்று கல்லூரியின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பணிக்கு வந்த கல்லூரி ஊழியர்களை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் கல்லூரி அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதாக பதிவாளர் கருத்து தெரிவித்தார்.

மேலும் போராட்டத்திற்கு காரணமான 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீசில், உங்கள் தவறான நடத்தையால் கல்லூரிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை வசூலிக்க எங்களுக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 5 மாணவர்களுக்கும் ரூ.33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக என்.ஐ.டி.மீடியா செல் தலைவர் டாக்டர் சுனிதாவை தொடர்பு கொண்டபோது, மாணவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வழங்கப்படவில்லை. ஆனால் மாணவர் விவகார கவுன்சில் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது என்றார்.