நாடு முழுவதும் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சில ஊர்களில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டி விட்டது. மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெயில் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட வானிலை முன்னறிவிப்பை சுட்டிக்காட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய தொழிலாளர் துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வெப்ப அலையின் தாக்கத்தால் தொழிலாளர்களும், ஊழியர்களும் பாதிக்கப்படாத வகையில் உரிய முன்னேற்பாடுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிறுவன உரிமையாளர்கள் ஆகியோருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்கலாம். பணியிடங்களில் போதிய குடிநீர் வசதிகள் இருப்பது அவசியம். கட்டுமான தொழிலாளர்களுக்கு வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான உபகரணங்களையும், ஐஸ் பேக்குகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்த சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
சுரங்கங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வெடுக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும். தரமான குளிர்ந்த நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும். தொழிலாளர்கள் அசவுகரியமாக உணர்ந்தால், வேலையை மெதுவாக செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஓய்வு எடுக்க நேரம் ஒதுக்க வேண்டும். குளிர்ச்சியான நேரத்தில் கடினமான வேலைகளை செய்யும்வகையில் பணி நேரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். வெயிலால் ஏற்படும் ஆபத்துகளையும், அவற்றை தணிக்கும் வழிகளையும் தொழிலாளர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். செங்கல் சூளை தொழிலாளர்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.