ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸ் விடுதலை
பாகிஸ்தானில் ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத்தலைவர் மரியம் நவாசுக்கு, அவன்பீல்டு குடியிருப்பு ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவரது கணவர் சப்தாருக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்மூலம் மரியம் நவாஸ் (வயது 48) தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார். இதையடுத்து சிறைத்தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பால் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி விடுதலை செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் லண்டனின் அவென்பீல்ட் குடியிருப்பில் ஆடம்பரமான 4 வீடுகளை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, விசாரணை அதிகாரியின் கருத்தை ஆதாரமாக கருத முடியாது என்று தெரிவித்தது. கூட்டு விசாரணைக் குழு எந்த உண்மைகளையும் முன்வைக்கவில்லை, அது தகவல்களை மட்டுமே சேகரித்து கொடுத்துள்ளது என்று நீதிபதி கயானி குறிப்பிட்டார்.
வழக்கின் முடிவில், அரசுத் தரப்பு ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிமன்றம் கூறி மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்துள்ளது. இதனால் மரியம் நவாஸ் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளார்.