முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஅள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியின் தந்தை மறைவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்துக்கு முன்பாகவே சென்னையில் அதிக கனக மழை பெய்யும் என வலியுறுத்தியது. தற்போதுள்ள அரசுக்கு அந்த செய்தி தெரிந்தும் பொருட்படுத்தவில்லை. சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் சென்னையில் உள்ள பொதுமக்கள் இவ்வளவு துன்பத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க. அரசின்போது ஒரு மாதத்திற்கு முன்பாகவே நடவடிக்கை எடுத்திருக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள அரசு எந்தவித முன்னெச்சரிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் 1300 மின்மோட்டார்கள் அ.தி.மு.க. அரசில் வைத்திருந்தோம். தாழ்வான இடங்களில் கனரக ராட்சத மின் மோட்டார் வைத்து உடனடியாக மழை நீரை அகற்றினோம். ஒவ்வொரு வார்டுகளிலும் அம்மா உணவகத்தில் தரமான உணவை மக்களுக்கு வழங்கினோம். தற்போது அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவகத்தை மூடிவிட்டனர்.
இதேபோன்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதுதமிழக அரசுக்கு தெரியும். நான் தூத்துக்குடிக்கு சென்ற பொழுது தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 10 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இங்குள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை பால், தண்ணீர், உணவு ஆகிவற்றை இந்த அரசு எதுவும் அந்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. தூத்துக்குடி நான் சென்ற பொழுது அங்கு எந்த அமைச்சரும் வரவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். இந்த அரசு செயலாற்ற அரசாக காட்சியளிக்கிறது.
இந்தியா கூட்டணி குழப்பத்தில் உள்ளது. அடுத்த கூட்டம் நடக்குமா? இல்லையா? என தெரியவில்லை. அக்கூட்டணியில் ஒருவர் தற்போது இந்தியில் பேச வேண்டும் என கூறுகிறார். வெவ்வேறு கருத்துக்களுடைய கட்சிகள் கூட்டணி அமைப்பது நீடிக்குமா என தெரியவில்லை.
தற்போது 2 அமைச்சர்கள் சிறைக்கு செல்கின்றனர். ஆனால் இன்னும் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் என பொறுத்திருந்து பாருங்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசு.
இவர்கள் சாதனை செய்தது ஊழல் தான். அனைத்து இடங்களிலும் கமிஷன், கரப்சன், இதுதான் அவர்களின் தாரக மந்திரம். அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியாக செயல்பட்டது. கடந்த 2½ ஆண்டு காலமாக தமிழகத்தை படுபாதாள இடத்தில் இந்த அரசு தள்ளிவிட்டுள்ளது. இந்த அரசு எதற்கெடுத்தாலும் குழு போட்டு செயல்படுகிறது. ஆகவே இந்த அரசு குழு அரசாங்கமாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.