X

ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து இன்று மத்திய அரசு அறிவிக்கிறது!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

என்றாலும் முககவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் சரியாக பின்பற்றாததால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் பீகார், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கை இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளன. மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படவேண்டும் என்பதில் அந்த மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதியாக உள்ளார்.

மேற்கு வங்காளமும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவாக இருந்த போதிலும், என்னென்ன கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என்பதை மாநிலங்களிடமே விட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறது.

ஊரடங்கை நீக்கினால் பாதிப்புகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய்விட வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை நிபுணர்களும் எச்சரித்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், இது புதிய வழிமுறைகளுடன் முந்தைய ஊரடங்குகளை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

4-வது கட்ட ஊரடங்கு வழிமுறைகள் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தனது துறை அதிகாரிகளுடனும், பிரதமரின் ஆலோசகர் பி.கே.மிஸ்ரா, மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா ஆகியோருடனும் ஆலோசனை நடத்தி உள்ளார்.

எனவே, 3-வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு இன்றுடன் நிறைவடைவதால், 4-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது.

அப்போது மேலும் எத்தனை நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும்? என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்?, என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பது பற்றி அறிவிக்கப்படும்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும், மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரஞ்சு மண்டலத்தில் குறைவான கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும், பச்சை மண்டலத்தில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்து உள்ளனர்.

அத்துடன் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பஸ், ஆட்டோ, மெட்ரோ ரெயில் மற்றும் சிறப்பு ரெயில்கள் குறைந்த அளவில் இயக்கப்படும் என்றும், வீட்டு உபயோக பொருட் கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட மேலும் பல கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.

மேலும் உள்நாட்டு விமான போக்குவரத்தை படிப்படியாக தொடங்கவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

Tags: south news