தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களாக இருந்த நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டும், வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும் புதிதாக உருவாக்கப்பட்டன.
இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்துமாறு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இதனையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31-ந்தேதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலை https://tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.
ஆனால் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு இப்போது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட வாரியாக தேர்தலை நடத்துவதற்கான அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன.
தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அப்போது அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு உறுப்பினர்கள், யூனியன் கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பதவிக்கான இடங்கள் குறித்தும், தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் 2 கட்டமாக தேர்தலை நடத்தலாமா? என்றும் விவாதித்தனர்.
இந்த கூட்டம் முடிந்ததும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார். இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, பேரூராட்சி இயக்குனர், ஊராட்சி இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 9 மாவட்ட தி.மு.க. செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துகளை கேட்டறிந்தார்.
அப்போது பேசிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், “9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி கிடைக்க பாடுபட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அ.தி.மு.க.விலும் இதே போல் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை கழகத்தில் ஏற்கனவே ஆலோசனை நடத்தினர்.
இதே போல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் நிலையில் இருப்பதால் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.