X

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் வருகிற 6-ந் தேதி மற்றும் 9-ந் தேதி என 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி மலர்வதற்கு வாக்களித்த நீங்கள், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர்வதற்காக தி.மு.க.வுக்கும், நம்முடைய கூட்டணி கட்சியினருக்கும் உங்களது பொன்னான வாக்குகளை வழங்கவேண்டும் என்று நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

பெண்கள் அனைவருக்கும் நகர பஸ்களில் கட்டணமில்லா பயண வசதியை செய்துள்ளோம். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்துள்ளோம். 14 வகையான மளிகை பொருட்கள் கொடுத்துள்ளோம். ஆவின் பால்விலையை ரூ.3 குறைத்துள்ளோம். பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கான தனியாக நிதி நிலை அறிக்கையை வெளியிட்டோம். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை ரத்து செய்துள்ளோம்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இவை அனைத்தையும் செய்து கொடுத்துள்ளோம் என்பதை தலைநிமிர்ந்து சொல்ல நான் விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் செய்து கொடுத்துள்ளோம் என்பதுதான் தி.மு.க.வின் தனித்தன்மை ஆகும்.

10 ஆண்டு காலம் ஒரு கட்சியின் ஆட்சி இருந்தது. அவர்கள் 2 சட்டமன்ற தேர்தலின்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த 4 மாத காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் 505-ல் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு இந்தியாவிலேயே தி.மு.க. அரசாக மட்டும்தான் இருக்கமுடியும். இத்தகைய விவேகமும், பொறுப்புணர்வும், அக்கறையும் கொண்ட அரசுக்கு மக்களாகிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க.வின் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் அவரவர்களுக்கான சின்னங்களில் வாக்களித்து தமிழகத்தில் அமைந்துள்ள நல்லாட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.