ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க-வினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. என்றாலும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகளும் சில இடங்களில் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பா.ஜனதாவினரை சந்தித்தார். அப்போது அவர்களுடன் எடுத்துக் கொண்ட படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த டுவிட்டருக்கு பதில் அளித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா 8 யூனியன் கவுன்சிலர், 41 பஞ்சாயத்து தலைவர்கள், 332 வார்டு உறுப்பினர்கள் இடங்களை பிடித்துள்ளது.