Tamilசெய்திகள்

ஊட்டி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டத்தில் காணப்படும், இயற்கை அழகினை ரசிக்கவும், இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம், வெளிநாடு என பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர்.

அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மலர் கண்காட்சி ஆன்லைன் வாயிலாக நடந்தது. வீட்டில் இருந்தவாறே மலர் கண்காட்சியை பார்த்தனர். இருப்பினும் நேரில் பார்த்தது போன்று இல்லை என்ற ஏக்கம் அவர்களுக்குள் இருந்தது.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி தொடங்கியது. விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ண மலர்களையும், மலர்களை கொண்டு அழகுப்படுத்தப்பட்டிருந்த அலங்கார பொருட்களையும் அவர் கண்டு ரசித்தார்.

கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களால் உருவான கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மாதிரி காட்சிபடுத்தப்பட்டிருந்தது. முக்கிய அம்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 பண்டைய பழங்குடியினரை கவுரவிக்கும் விதமாக 20 ஆயிரம் கார்னேஷன் மலர்களை கொண்டு பழங்குடியினரின் உருவங்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

124வது மலர் கண்காட்சியை குறிக்கும் வகையில் 20 ஆயிரம் கார்னேஷன் மலர்களை கொண்டு, 124வது மலர் கண்காட்சி வாசகமும், ஊட்டி உருவாகி 200 ஆண்டு ஆவதையொட்டி ஊட்டி 200 என்ற வாசகம் 10 ஆயிரம் கார்னேஷன் மலர்களால் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்தது.

காய்கறிகளில் உருவான சிறிய வகையிலான வனவிலங்குகள், பல்வேறு உருவங்களும் இடம் பெற்றிருந்தது. நீலகிரியை கவுரவிக்கும் விதமாக காட்டெருமை காட்சிபடுத்தப்பட்டிருந்தது. குழந்தைகளை கவர பல வகையான கார்ட்டூன் வடிவ அலங்காரமும் கண்காட்சியில் இருந்தது.

பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு பூங்கா முழுவதும் 10 அலங்கார வளைவுகளும், மலர்களால் பல இடங்களில் ரங்கோலியும் வரையப்பட்டிருந்தது. இதுதவிர மலர் கோபுரங்கள், மலர் அலங்காரமும் இடம் பெற்றிருந்தது.

ஜெரேனியம், சைக்ளமன், சினரேரியா, கிளக்ஸ்சீனியா, ரெனன்குலஸ் மற்றும் பல புதிய ரக ஆா்னமென்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மெரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பென்டாஸ், பிரஞ்ச் மெரிகோல்டு, பேன்சி, பெட்டூனியா, பிளாக்ஸ் , பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வொ்பினா, சன்பிளவா், சிலோசியா, ஆன்டிரைனம், லயோலா, லிமோனியம், ட்யூப்ரஸ் பிகோனியா, ருட்பெக்கியா, டொரினியா போன்ற 275 வகையான ரகங்களில் சுமாா் 35,000 மலா்த்தொட்டிகளும் மலர் மாடங்களிலும் பூங்காவிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இன்று தொடங்கிய கண்காட்சியானது வருகிற 24ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. 5 நாட்களிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

2 ஆண்டுகளுக்கு பிறகு கண்காட்சி தொடங்கியதால் ஊட்டி தாவரவியல் பூங்காவில் காலை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மலர் கண்காட்சியை காண வேண்டும் என்ற ஆவலில் டிக்கெட் எடுத்து கொண்டு சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் சென்றனர்.

அங்கு பல வண்ண மலர்களால் உருவான கார்ட்டூன் பொம்மைகள், வனவிலங்குகளின் உருவங்கள், மலர் அலங்கார வளைவுகள், மலர் ரங்கோலி, மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்கள் அனைத்தையும் கண்டு ரசித்தனர். இது அவர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. அவற்றின் முன்பு நின்று செல்பி மற்றும் குழு புகைப்படமும் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.