X

உ.பி சட்டமன்ற தேர்தல் – பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் தேர்வு

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.

தற்போது பெரும் சவாலாக இருந்து வரும் கொரோனா பரவலை யோகி ஆதித்யநாத் முறையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது செயல்பாடுகள் மோசமாக உள்ளது என்று மந்திரிகளே எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜனதா மேலிடத்துக்கும் புகாராக தெரிவிக்கப்பட்டது.

இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பா.ஜனதா தலைமை முடிவு செய்தது. இதற்காக பா.ஜனதாவின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் ராதா மோகன்சிங் ஆகியோர் கடந்த வாரம் லக்னோவுக்கு அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மாற்றப்படுவார். வரும் சட்டசபை தேர்தலில் அவருக்கு முதல்-மந்திரியாகும் வாய்ப்பு இல்லை என்று பேச்சு எழுந்தது.

குஜராத்திலும், மத்திய அரசிலும் பிரதமர் மோடியுடன் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த் சர்மா ஓய்வு பெற்ற பின் உ.பி.யின் மேல்-சபை உறுப்பினராக இருக்கிறார். இவரை யோகி ஆதித்யநாத்துக்கு இணையாக துணை முதல்-மந்திரியாக்க பா.ஜனதா தலைமை முயற்சி செய்வதாகவும் கூறப்பட்டது. இதை யோகி ஆதித்யநாத் ஏற்க மறுப்பதாகவும் பேசப்பட்டது.

இதுபோன்ற காரணங்களால் கடந்த 5 மாதங்களாக உ.பி. மந்திரி சபை விரிவாக்கம் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், பா.ஜனதா மேலிட நிர்வாகிகள் யோகி ஆதித்யநாத் மீது கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரித்தனர்.

மாநில மந்திரிகள், பா.ஜனதா நிர்வாகிகள், பா.ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் இந்த விசாரணை நடந்தது. அப்போது, உ.பி. சட்டசபை தேர்தலில் மீண்டும் யோகி ஆதித்யநாத்தை முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்தலாம். அவருக்கு இணையாக வேறு யாரும் இல்லை. மந்திரி சபையை விரிவுபடுத்தினால் போதும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. இது, அறிக்கையாக கட்சி மேலிடத்துக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் 3 நாள் நடந்தது. இதில் பா.ஜனதா தேசிய பொது செயலாளர்கள் அளித்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் யோகி ஆதித்யநாத்தை மீண்டும் உ.பி. முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கூறியதாவது:-

பிரதமர் மோடிக்குப் பிறகு இந்துத்துவா கொள்கையை செயல்படுத்த யோகி ஆதித்யநாத்தால் மட்டுமே முடியும். எனவே, அவரையே மீண்டும் உ.பி. சட்டசபை தேர்தலில் முதல் மந்திரியாக முன்னிருத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு அளிக்கிறது.

இது சமீபகால தேர்தல்களில் மோடிக்கு அடுத்தபடியாக யோகி பிரசாரம் செய்ததில் நிரூபணமாகி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

உ.பி. தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்ற பிறகு மாநில பா.ஜனதா தலைவராக இருந்த கேசவ் பிரசாரத் மாரியா, உ.பி.யை சேர்ந்த மத்திய மந்திரி மனோஜ் சின்கா ஆகியோர் பெயர்களும் முதல்-மந்திரி பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டது. யோகி ஆதித்யநாத்தை உ.பி. முதல் மந்திரியாக்க வேண்டும் என்று தேர்வு செய்தது ஆர்.எஸ்.எஸ். தான்.

இந்த நிலையில், மீண்டும் அவரையே உ.பி. முதல்மந்திரி வேட்பாளராக தேர்வு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.