உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா – கவர்னர் ஆர்.என்.ரவி கொடி ஏற்றுகிறார்

மக்களாட்சியை ஆதாரமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சாசனம், 26.1.1950 அன்று அமலுக்கு வந்தது. அந்த தினம், குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே இந்த ஆண்டு குடியரசு தின விழா, மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்பட்டு 22 நிமிடங்களில் விழா நிறைவடைந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு குடியரசு தினத்தை வெகுவிமரிசையாக முழு அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு ஏற்றபடி உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்பட்டு வருகின்றன. அங்கு சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அமருவார்கள்.

காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதலமைச்சரை தலைமைச்செயலாளர் இறையன்பு வரவேற்பார். 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகிறார். அதைத்தொடர்ந்து அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பார். பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.

அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும். தேசிய கீதம் இசைக்கப்படும். பின்னர் பல்வேறு படை அணியினர் மிடுக்குடன் வந்து வணக்கம் செலுத்துவார்கள். அதை கவர்னர் ஏற்றுக்கொள்வார். அதைத்தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட படைப்பிரிவினர் அணி வகுத்து செல்வார்கள். அதன் தொடர்ச்சியாக அணி வகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த போலீஸ் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதலமைச்சர் வழங்குவார்.

அதைத்தொடர்ந்து கண்கவர் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதைத்தொடர்ந்து அன்று மாலை 4.30 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைவரையும் கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் வரவேற்பார்கள். அனைவருக்கும் அங்கு தேநீர் விருந்து அளிக்கப்படும். அப்போது, சிறந்த சமூக சேவைக்கான விருது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது ஆகியவற்றை உரியவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வழங்குவார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools