Tamilவிளையாட்டு

உள்ளூர் போட்டிகளில் விளையாடுவஹ்டு குறித்து ஹரிதிக் பாண்ட்யாவுக்கு கிரிக்கெட் வாரியம் நிபந்தனை

இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னணி பேட்ஸ் மேன்களான ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டனர். ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட இருவரையும் கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இதையடுத்து இருவரையும் வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது.

இதற்கிடையே ஒரு ஆண்டாக உள்ளூர் போட்டிகளில் விளையாட ஹர்திக் பாண்ட்யா, ‘ஏ’ பிரிவு ஒப்பந்தத்தில் இருப்பது குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். தனது உடல் தகுதி, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஒத்துழைக்காது என்று ஹர்திக் பாண்ட்யா கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். இதை கிரிக்கெட் வாரியம் ஏற்று கொண்டதால், ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.

இந்தியாவுக்காக தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்றால் ஹர்திக் பாண்ட்யா உள்ளூர் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர்களில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

நாங்கள் ஹர்திக் பாண்ட்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதில் உள்ளூர் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுமாறு கூறியுள்ளோம். தற்போதைய நிலைமையில் கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி அவரால் ரஞ்சிக் கோப்பை போன்ற டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது. ஆனால் இந்தியாவுக்காக விளையாடாத சமயத்தில் ஹர்த்திக் பாண்ட்யா உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட வேண்டும். அவர் அதில் விளையாடாவிட்டால் ஒப்பந்தத்தை இழக்க நேரிடும் என்றார்.

உள்ளூர் போட்டிகளில் விளையாட ஹர்திக் பாண்ட்யா உறுதி அளித்த பிறகே அவர் ஒப்பந்தத்தில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. அதேபோல் ரோகித் சர்மா, விராட் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.