Tamilசெய்திகள்

உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால், இந்த அறிவிப்பில் எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் தள்ளிக்கொண்டே போனதால், தனி அதிகாரிகளின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இதுவரை 5 முறை அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபடத்தொடங்கியது. கடந்த மாதம் (மே) உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்காக பகுதி மேம்பாட்டு அதிகாரிகள் (பி.டி.ஓ.), வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

அதன்பின்னர், வாக்காளர் பட்டியலை எவ்வாறு தயார் செய்ய வேண்டும்? என்பதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதேபோல், வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குச்சாவடிகளை அமைப்பது குறித்தும் வழிமுறைகளை வகுத்து கொடுத்தது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடைந்து அடுத்த மாதம் (ஜூலை) 2-வது வாரம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தல் தேதி ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதாவது, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒதுக்கீடானது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14 மாநகராட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 14 மேயர் பதவிகளும் அடங்கும். இதேபோல், 122 நகராட்சிகளில் 3500-க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளும், 122 தலைவர் பதவிகளும் உள்ளன.

மேலும், 528 பேரூராட்சிகளில் 8,288 வார்டு கவுன்சிலர் பதிவுகளும், 528 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,471 கவுன்சிலர் பதவிகளும், 388 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 12,524 ஊராட்சிகளில் 99,324 கவுன்சிலர் பதவிகளும், 12,524 தலைவர் பதவிகளும் உள்ளன.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இதில் பொதுப்பிரிவினர், பொதுப்பிரிவு பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள் என பிரித்து வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. பழங்குடியினருக்கு என்று வார்டுகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. (வார்டுகள் ஒதுக்கீடு விவரம் 5-ம் பக்கம்)

பதவிகள் அடிப்படையில், தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற 6 வகையாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி எந்தெந்த வார்டுகளில் யார்-யார் போட்டியிடலாம் என்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதில் பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இதேபோல் சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஆணையில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், தற்போது புதிதாக வார்டு வரையறை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், 3 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறாமல் இருந்து வந்த உள்ளாட்சி தேர்தல், விரைவில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கி உள்ளன. அரசியல் கட்சிகளும் அதை எதிர்கொள்ள ஆரம்ப கட்ட பணிகளை துரிதப்படுத்தி இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *