உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த ரஜினி, கமல்!
உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவ தில்லை என்று கமல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான ரஜினியும், கமலும் அரசியலில் கால் பதித்துள்ளனர். புதுக்கட்சியை தொடங் காமலேயே அரசியலில் தனது பேச்சுக்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஜினிகாந்த் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன் என்று கூறி சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வருகிறார்.
தமிழகத்தின் நலனுக்காக தேவைப்பட்டால் கைகோர்ப்போம் என்று ரஜினியும் கமலும் கூறியுள்ள னர்.
இதன்மூலம் இருவரும் சட்டமன்ற தேர்தலை குறி வைத்தே அரசியல் களத்தில் பயணித்து வருவது உறுதியாகியுள்ளது.
ரஜினி, கமல் இருவருமே தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல் பட்டு வருகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வரும் கமல் கிராமப் புறங்களில் தொடங்கி நகர பகுதிகள் வரையில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். ரஜினி அடுத்த ஆண்டு தனிக்கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
இருவரும் அரசியலில் இணைந்து பணியாற்றும் எண்ணத்திலேயே ஒன்றாக கை கோர்ப்போம் என்று கூறி உள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருக்கும் நிலையில், இருவரும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார்கள். இதன் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கமல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ரஜினியை பொறுத்த வரையில் கட்சியை தொடங் காத காரணத்தால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலே உள்ளது.
தனது பெயரையோ, ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரையோ யாரும் பயன் படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ள ரஜினி உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதன்மூலம் உள்ளாட்சி தேர்தலில் எனது வாய்ஸ் யாருக்கும் கிடையாது என்பதை ரஜினி தெளிவுபடுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு புதிய கட்சியை தொடங்கும் ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் ஏற்கனவே தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளனர்.
மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்ப்பது, நலத்திட்டங்களை மேற்கொள்வது என ரஜினி ரசிகர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். உறுப்பினர் சேர்க்கையும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது எளிதாகவே இருக்கும் என்று ரஜினி நினைக்கிறார்.
அதே நேரத்தில் கூட்டணி சேர்ந்து மாற்றதை ஏற்படுத்தலாம் என்கிற எண்ணம் ரஜினி, கமல் இருவரது மனதிலுமே உள்ளது. எனவே சட்டமன்ற தேர்தலில் இருவருக்கும் இணைந்து செயல்பட கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.