Tamilசெய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக சதி! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தி.மு.க. முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரும்ப திரும்ப பொய் சொல்கிறார்.

உண்மையை திரும்ப திரும்ப சொன்னால் அதை உண்மை என்று ஒத்துக்கொண்டு போகலாம். ஆனால் பொய்யை திரும்ப திரும்ப எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்கு எடப்பாடி தலைமையில் இருக்கிற அ.தி.மு.க. ஆட்சி பல்வேறு திட்டங்களை போடுகிறது. அதற்காக பல பேரை நீதிமன்றத்தில் வழக்கு போட அ.தி.மு.க. மறைமுகமாக ஆள் அனுப்பி வருகிறார்கள். 3 வருடமாக இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.

எங்கள் கட்சி சார்பில் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்றத்துக்கு சென்று தேர்தலை எந்த காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என்று கூறி உள்ளார்.

ஆனால் தேர்தல் நடத்துவதற்கு முன்பு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ‌ஷரத்துகள், எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு, இதையெல்லாம் முறைப்படுத்திவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று சொல்லி உள்ளோம்.

அந்த அடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றம் இதையெல்லாம் முறைப்படுத்தி தேர்தல் நடத்த சொல்லி உள்ளதே தவிர, தி.மு.க. தேர்தலை நிறுத்தி விட்டது என்று எங்கும் சொல்லவில்லை.

நான் மக்கள் மன்றத்தில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் இதை நான் பதிவு செய்துள்ளேன். நான் திரும்ப திரும்ப சொல்கிறேன்.

வார்டு வரையறையை முறைப்படுத்த வேண்டும், அதற்கு அடுத்தபடியாக புதிய மாவட்டங்களை உருவாக்கி உள்ளனர். அதை வரவேற்கிறேன். ஆனால் மாவட்டங்களை பிரித்திருக்கிறார்களே தவிர அதன் வரையறையை வெளியிடவில்லை.

மேலும் பேரூர், நகராட்சி, மாநகராட்சி, இதனுடைய பட்டியலில் பழங்குடியின பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா? என்றால் இல்லை.

சுப்ரீம் கோர்ட்

இந்த வி‌ஷயத்தில் உச்ச நீதிமன்றமே தெளிவாக சொல்லி உள்ளது. வார்டை முறைப்படுத்தி தேர்தலை நடத்த அரசு உறுதி சொல்ல வேண்டும் என்று கூறி உள்ளது. இதையெல்லாம் நிறைவேற்றி இருக்கிறார்களா? என்பதுதான் எனது கேள்வி.

இதற்கான பதிலை எடப்பாடி பழனிசாமி சொல்ல வேண்டும். இதற்கென்று மாநில தேர்தல் ஆணையம் உள்ளது.

இந்த தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால், எதற்கும் பதில் கிடையாது. 2 நாள் முன்புகூட அனைத்து கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியது. அதிலும் தி.மு.க. சார்பில் மறுபடியும் நினைவுபடுத்தினார்கள். அதற்கும் பதில் சொல்லவில்லை.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படைத் தன்மையாக இல்லை.

அதனால்தான் நீதிமன்றத்தை அணுகி உள்ளோம். தேர்தலை நிறுத்த நாங்கள் சொல்லவில்லை. இந்த அரசு சட்டத்தை மீறி விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல் நடத்தும் சூழ்நிலை வந்தாலும் கூட அதை சந்திக்க தி.மு.க. எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *