Tamilசெய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மீண்டும் போராட்டம் தொடங்கும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணுக்கு இன்று 95-வது பிறந்த நாள். இதையொட்டி தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நல்லக்கண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. சென்றிருந்தார்.

அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஒரு மிகப்பெரிய பேரணியை நாம் நடத்தி முடித்திருக்கிறோம்.

இந்த பேரணியில் பங்கேற்ற தலைவர்களை முன்னணியினரை, செயல் வீரர்களை ஏறக்குறைய 8 ஆயிரம் பேர் மீது வழக்கு போட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் சில அமைச்சர்கள், கூறும்போது இந்த பேரணியில் 5 ஆயிரம் பேர்தான் பங்கேற்றார்கள் என்று ஒரு பக்கம் செய்தி சொல்கிறார்கள். ஆனால் காவல் துறை 8 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். எது உண்மை. முதலில் அவர்கள் அதை சொல்ல வேண்டும்.

லட்சக்கணக்கான பேர் பேரணியில் பங்கேற்றார்கள் என்று ஊடகங்களில் செய்தி வந்திருக்கிறது.

மத்திய மாநில அரசு உளவுத்துறைக்கு அந்த துறையை சார்ந்தவர்களும் கணக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அரசுக்கு கணக்கு கொடுக்கக்கூடியவர்கள் எப்போதும் கூட்டத்தை பாதியாக குறைத்துதான் கொடுப்பார்கள். எதிர்க்கட்சி நடத்துகிற ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் பேரணியாக இருந்தாலும், அதில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையை குறைத்து தான் தருவார்கள்.

அதே நேரத்தில் ஆளுங்கட்சி நடத்தினால் 50 பேர் என்றால் 200 பேர் என கூட்டி சொல்வார்கள். அது அவர்களது வழக்கம்.

எது எப்படி இருந்தாலும் 8 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களது இந்த போராட்டம் தொடரும். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று ஏற்கனவே நான் அறிவித்திருக்கிறேன்.

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மதசார்பற்ற கூட்டணி தலைவர்களை இணைத்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பொதுவுடமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக உண்மையாக, எழுச்சிமிக்கதாக இதோ நம்முன் வாழ்கிறாரே அய்யா நல்லகண்ணு அவர்களைப் போல இருக்கும்! மார்க்சியத் தத்துவத்தின் மனித உருவம் அவர். 95 வயதிலும் தொய்வில்லா போராளி, இடைவிடாத உழைப்பாளி, தூய்மையான சிந்தனையாளர். அய்யா நல்லகண்ணுவை வணங்குகிறேன் இன்னும் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து மக்களுக்கு உணர்ச்சியூட்டுங்கள்! உற்சாகமும் ஊக்கமும் தாருங்கள்! என்று அவரைப் பணிவன்புடன் வேண்டுகிறேன். தி.மு.க சார்பில் நல்லகண்ணு அய்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *