X

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தினகரனின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிடும்! – புகழேந்தி தாக்கு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்திக்கும், அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான கருத்துகளை புகழேந்தி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அதிருப்தியாளர்களின் தஞ்சை மண்டல ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்தில் புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு மண்டலங்களிலிருந்தும் அ.ம.மு.க.வின் அதிருப்தியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நூற்றுக்கணக்கான ஒன்றிய செயலாளர்கள், அ.ம.மு.க. தொண்டர்களுடன் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வில் இணைய உள்ளோம்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 80 சதவீத இடங்களில் வெற்றி பெறும். இதற்காக நாங்கள் பட்டி, தொட்டியெங்கும் சென்று பிரசாரம் செய்வோம்.

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு டி.டி.வி. தினகரனின் அரசியல் அத்தியாயம் முடிந்து விடும். கஜா புயல் பாதிப்பின்போது சொந்தமாக ஒரு பைசா கூட பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்கவில்லை.

டி.டி.வி. தினகரன் அரசியல் நடத்த தெரியாதவர், அவரை இவ்வளவு நாளாக நாங்கள் தலைவராக ஏற்று கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். அவருடைய சொத்துகளை பாதுகாத்துக்கொள்ளவே அரசியலில் இருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க.வினர் விருப்ப மனுவை பெற்றனர். ஆனால் அரசியல் இயக்கம் நடத்துவதாக கூறும் தினகரன் எங்காவது விருப்பமனு வாங்கினாரா? இல்லை. அவருக்கு இந்த இயக்கத்தை கட்சியாக மாற்ற விருப்பமில்லை. அ.ம.மு.க.வை தொடங்க துணை நின்றவர்களில் நானும் ஒருவன். இந்த இயக்கத்தை விட்டு நாள்தோறும் பலர் வெளியேறி வருகிறார்கள்.

எனவே இன்று முதல் அ.ம.மு.க. கலைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் தேர்தல் ஆணையத்திடம் கடந்த 23-ந் தேதி கடிதம் அனுப்பி விட்டேன். இனிமேல் அ.ம.மு.க. பெயரை யாராவது பயன்படுத்தினால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தஞ்சையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்படி அ.ம.மு.க. கலைக்கப்பட்டு விட்டது. இதை நம்பி எந்த பயனும் இல்லை. தினகரனின் அருகிலேயே 2 ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர். அவர்கள் யார் என்பது விரைவில் தெரிய வரும்.

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே அ.ம.மு.க.வில் உள்ள அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்து விடுவார்கள். டி.டி.வி. தினகரனை தவிர்த்து யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேரலாம். சிறையில் உள்ள சசிகலா நாள்தோறும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தொலைக் காட்சி செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறார். சிறை தண்டனை முடிவடைந்ததும் சசிகலா அ.தி.மு.க.வுக்கு வருவது அவரது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news