தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 3 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களுக்கு நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
மாவட்டங்கள் பிரிப்பு, வார்டு மறுவரையறை பணி போன்ற காரணங்களால் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை வருகிற செப்டம்பர் 15-ந்தேதிக்குள் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி உள்ளது.
இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.