X

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடக்கிறது

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை 2 கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில், 76.19 சதவீத வாக்குகள் பதிவாயின.

இந்தநிலையில், இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

முதல் கட்ட தேர்தலை விட 2-ம் கட்ட தேர்தலில் அதிக பதவி இடங்களுக்கான தேர்தல் நடந்ததால், வாக்குப்பதிவுக்கு 93 ஆயிரம் ஓட்டுப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றதால், ஒவ்வொரு வாக்காளரும் தலா 4 வாக்குகள் பதிவு செய்தனர்.

காலையிலேயே ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். இளம் வாக்காளர்களும் வாக்களிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

காலை 9 மணி வரை 10.41 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 11 மணி நிலவரப்படி 25.81 சதவீதமும், பகல் 1 மணி நிலவரப்படி 45.76 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61.45 சதவீதமும் பதிவாகி இருந்தது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. 77.73 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்திருந்த தகுதியுள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு சில அசம்பாவிதங்களை தவிர 2-ம் கட்ட வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

முதல் கட்ட தேர்தலின்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 30 வார்டுகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பந்தப்பனேந்தல், சித்தனேந்தல் ஆகிய ஊர்களில் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, பகல் 12 மணி வரை யாரும் ஓட்டுப்போட வரவில்லை. அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்திய பிறகு, மக்கள் வாக்களிக்க வந்தனர்.

ஓட்டுப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் என 61 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பதற்றமானவை என கண்டறியப்பட்ட 8,633 மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 1,551 வாக்குச்சாவடி மையங்கள் ‘வெப் கேமரா’ மூலம் கண்காணிக்கப்பட்டன. 2,842 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு ‘வீடியோ’ பதிவு செய்யப்பட்டது.

முதல் கட்ட தேர்தலை கண்காணித்தது போன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்தபடி மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவையும் ‘வெப் கேமரா’ உதவியுடன் பார்வையிட்டார்.

முதல் கட்ட தேர்தலின்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 30 வார்டுகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. அதையும் இரா.பழனிசாமி பார்வையிட்டார்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை ‘சீல்’ வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 310 மையங்களில் எண்ணப்படுகின்றன. அன்று முடிவுகள் வெளியாகும்.