X

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திருப்தியாக உள்ளது – உயர் நீதிமன்றம் அறிவிப்பு

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நன்மாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வக்கீல் அணி செயலாளர் பார்வேந்தன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி நடக்கிறது. தேர்தலின் போது ஆளும் கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் தெரிவித்தும், மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதும், நேர்மையாக, நியாயமாக வாக்கு எண்ணிக்கையை நடத்துவதும் மாநில தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும்.

ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கான வாக்குகளும் ஒரே பெட்டியில் போடப்படுவதாகவும், அவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணும் போது, முறைகேடுகள் நடக்காதபடி, உள்ளாட்சி தேர்தல் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். வாக்கு எண்ணிக்கை, பாதுகாப்பு போன்ற அனைத்து நடைமுறைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கவும், ஒவ்வொரு வாக்குச்சீட்டையும் வீடியோ பதிவு செய்யும் வகையில் வீடியோ எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதேபோன்று கீதா என்பவர் உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் தரப்பில் வக்கீல் சூர்யபிரகாசம், மற்ற மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் செல்வராஜ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் விதிகள்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்கள் அச்சப்பட தேவையில்லை. ஒவ்வொரு வாக்குச்சீட்டை வீடியோ பதிவு செய்யவும், அதை ஒளிபரப்பவும் தேர்தல் விதிகளில் இடம் இல்லை’ என்று தெரிவித்தார்.

போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், வாக்கு எண்ணிக்கையை சுமுகமாக நடத்தி முடிக்க பாதுகாப்பு சம்பந்தமாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், ‘இந்தியா முழுவதும் பின்பற்றப்படும் தேர்தல் நடைமுறையே உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போதும் பின்பற்றப்பட உள்ளது. மனுதாரரின் கோரிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ள தேர்தல் விதிகள் தான்’ என்றார்.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அனைத்து மனுக்களையும் முடித்து வைத்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி தனது உத்தரவில், ‘வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும், நியாயமாகவும் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. தேர்தல் ஆணைய விதிகளை தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் முறையாக பின்பற்றி நடப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கூறி உள்ளார்.

Tags: south news