X

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பளித்தது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91,975 பதவி இடங்களை நிரப்பிட இத்தேர்தல் நடைபெறுகிறது. 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5090 ஊராட்சி, ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடங்கும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊரக வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 4700 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 37830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கும் வருகிற 27-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டத்தில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 4924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 38916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் வருகிற 30-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும்.

முதல்கட்ட தேர்தல் 24,680 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்ட தேர்தல் 25,008 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 49,688 வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ளது.

முதல்கட்ட தேர்தலில் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள், 2-ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலக செயலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் 17-ந்தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. மனுக்களை திரும்பப்பெற 19-ந்தேதி கடைசி நாளாகும்.

27, 30-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஜனவரி 2-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும். வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6-ந்தேதி பதவி ஏற்கின்றனர். அந்தந்த உள்ளாட்சி மன்ற தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.