Tamilசெய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி 18,570 பேர் தேர்வு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 24,680 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது.

இந்த தேர்தலில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 பேர் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் 18,570 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 பணியாளர்கள் வாக்குச்சாவடிகளில் பணியில் உள்ளனர். 702 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளாட்சி தேர்தல் பணியில் இருக்கிறார்கள்.

முதல் கட்ட தேர்தலில் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். 30-ந்தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

8 ஆயிரத்து 633 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 1709 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

2-ம் கட்ட தேர்தலில் 1550 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். 2,842 ஓட்டுச்சாவடிகளில் வீடியோ எடுக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் 2,939 நுண் பார்வையாளர்களும், 495 பறக்கும் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட தேர்தலில் 60 ஆயிரம் போலீசார் பணியில் இருக்கிறார்கள். 30-ந்தேதி நடைபெறும் தேர்தலுக்கு 61 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 53 லட்சத்து 16 ஆயிரத்து 290 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1492 மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

1700 புடவைகளும், 2202 குத்துவிளக்குகளும் பறக்கும் படை சோதனையில் சிக்கியுள்ளது. இது தவிர 1850 மற்ற பரிசுப் பொருட்களும் பிடிபட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *