உள்ளாட்சி தேர்தலின் போது தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்!
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ந்தேதி என 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு முன் 48 மணி நேரம் (2 நாட்கள்) மது விற்பனையை நிறுத்தி வைப்பதற்காக முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணி முதல் 27-ந் தேதி மாலை 5 மணி வரையும், 2-வது வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வருகிற 28-ந் தேதி மாலை 5 மணி முதல் 30-ந் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜனவரி 2-ந்தேதியும் மதுபானக்கடைகள் மூடியிருக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே, தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச்செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறியவர்கள் மீது சட்டப்படி பறிமுதல் செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.