Tamilவிளையாட்டு

உள்நாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல் நடைமுறையை வெளியிட்ட பிசிசிஐ

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் உள்பட எந்தவொரு விளையாட்டு போட்டியும் நடைபெறவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவின் பரவல் தீவிரமாகி வருவதால் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை வெளிப்புற மைதானங்களில் தொடங்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டுக்கான (2020-21) கிரிக்கெட் சீசன் வழக்கமாக இந்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கும். தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உள்ளூர் வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளை தொடங்குவது காலதாமதமாகி வருகிறது.

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது எப்போது? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்காக வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ளது. 100 பக்கங்கள் கொண்ட அந்த வழிகாட்டுதல் நடைமுறையில் வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும், எதனை செய்யக்கூடாது என்பது குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டு இருக்கும் இந்த வழிகாட்டுதல் நடைமுறையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ‘ஆன்-லைன்’ மூலம் ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட வேண்டும். அதாவது பயிற்சியின் போது கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நேரிட்டால் அதனால் ஏற்படும் இன்னல்களுக்கு தாங்களே பொறுப்பு என்பதை ஏற்க சம்மதம் தெரிவிக்க வேண்டும். வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களின் உடல் நலம், பாதுகாப்புக்கு அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களே பொறுப்பேற்க வேண்டும்.

பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர், மைதான ஊழியர் உள்ளிட்ட எந்தவொரு பணியிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கக்கூடாது. மத்திய அரசின் வழிகாட்டுதல் நடைமுறை அனுமதிக்கும் வரை அவர்களை பயிற்சிக்கு பயன்படுத்தக்கூடாது. அதுபோல் உடல் நலப்பிரச்சினை உடைய யாரையும் பயிற்சி முகாமில் பங்கேற்க இடம் கொடுக்கக்கூடாது. வீரர்கள் தாங்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து பயிற்சி நடைபெறும் இடத்துக்கு வருகையில் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அத்துடன் அனைவரும் தங்கள் சொந்த வாகனத்தில் வர வேண்டியது அவசியமானதாகும்.

உள்ளூர் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று டாக்டர்கள் குழு வசதியுடன் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களிடம் கடந்த 2 வார காலத்தில் மேற்கொண்ட பயணங்கள், மருத்துவ நிலை குறித்த விவரங்களை கேட்டு பதிவு செய்ய வேண்டும். யாருக்காவது கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பயிற்சி முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் இரண்டு முறை (ஒருநாள் விட்டு ஒருநாள்) கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அந்த இரண்டு சோதனையிலும் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்தால் மட்டுமே பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அனைவரும் ‘ஆரோக்ய சேது’ செயலியை (ஆப்) பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

பயிற்சி முகாம் தொடங்கும் முன்பு டாக்டர்கள் குழு சார்பில் ஆன்-லைன் மூலம் வீரர்களுக்கு மருத்துவ கருத்தரங்கு நடத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும். பயிற்சி நடைபெறும் இடங்களில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது. சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்கணும். பயிற்சியின் போது வீரர்கள் முகக்கவசம் (வால்வு இல்லாத எண் 95 மாஸ்க்) கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். மேலும் பொது இடங்களிலும், பயிற்சிக்கு வருகையிலும் முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும். பந்தை பளபளக்க வைக்க எச்சிலை பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்து இருப்பதால், பயிற்சியின் போது பந்தை எச்சிலை கொண்டு பளபளப்பாக்க அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *