Tamilசெய்திகள்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனை கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியது

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 63 ஆயிரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை கணினிமயமாக்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தினால் 13 கோடி சிறிய மற்றும் ஏழை விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இணைய பாதுகாப்பு, தரவுகள் சேமிப்பு வசதிகளுடன் இந்த கணினிமய திட்டம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், முற்றிலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனை கட்டுப்பாடுகளை நீக்குவது என பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து உற்பத்தியாளர்களுக்கு சந்தை சுதந்திரத்தை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களில் அரசுக்கோ, அரசால் நியமிக்கப்படுவோருக்கோ, அரசு நிறுவனங்களுக்கோ கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான நிபந்தனைகள் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் கச்சா எண்ணெயை உள்நாட்டு சந்தையில் விற்க முடியும் என்றும் மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.