உலக ஹாக்கி தரவரிசை – இந்திய அணி 3 வது இடத்திற்கு முனேற்றம்
உலக ஹாக்கி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி இந்திய அணி (2771.35 புள்ளிகள்), இங்கிலாந்தை (2763.50 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்த உயர்வை பெற்றுள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் பட்டம் வென்றது. ஜப்பானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மட்டும் டிரா கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்தை பிடிப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் இந்திய அணி 3-வது இடத்தை பிடித்து இருந்தது.
நெதர்லாந்து அணி (3095.90 புள்ளிகள்) முதலிடத்திலும், பெல்ஜியம் அணி (2917.87 புள்ளிகள்) 2-வது இடத்திலும் தொடருகின்றன. ஜெர்மனி அணி 5-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 6-வது இடத்திலும், ஸ்பெயின் அணி 7-வது இடத்திலும், அர்ஜென்டினா அணி 8-வது இடத்திலும், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 2-வது இடம் பிடித்த மலேசிய அணி 9-வது இடத்திலும், நியூசிலாந்து அணி 10-வது இடத்திலும் நீடிக்கின்றன.
தென்கொரியா அணி 11-வது இடமும், பாகிஸ்தான் அணி 16-வது இடமும், ஜப்பான் அணி 18-வது இடமும் வகிக்கின்றன.