X

உலக பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பெண்கள் பிரிவில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து களம் இறங்குகிறார். உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, 2017 மற்றும் 2018-ம் ஆண்டு உலக பேட்மிண்டனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். மேலும் இரண்டு வெண்கலப்பதக்கமும் வென்று இருக்கிறார். ஆனால் அவருக்கு தங்கப்பதக்கம் மட்டும் எட்டாக்கனியாக இருக்கிறது. அவருக்கு மட்டுமல்ல, 42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் எந்த இந்தியரும் தங்கப்பதக்கத்தை மகசூல் செய்ததில்லை.

இந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் முனைப்புடன் உள்ள பி.வி.சிந்து ‘பை’ சலுகை மூலம் நேரடியாக 2-வது சுற்றில் கால்பதிக்கிறார். 2-வது சுற்றில் அவர் பாய் யூபோ (சீனதைபே) அல்லது லின்டா ஜெட்சிரி (பல்கேரியா) ஆகியோரில் ஒருவரை சந்திப்பார். 24 வயதான சிந்து கூறுகையில், ‘இந்த போட்டிக்காக நான் கடினமாக உழைத்திருக்கிறேன். நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன். ஆனால் நெருக்கடி இல்லை’ என்றார்.

உலக பேட்மிண்டனில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருக்கும் மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட இருக்கிறார். எல்லா தடைகளையும் வெற்றிகரமாக கடந்தால் சாய்னாவும், சிந்துவும் அரைஇறுதியில் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். இவர்களுக்கு நம்பர் ஒன் புயல்’ அகானே யமாகுச்சி (ஜப்பான்), தாய் ஜூ யிங் (சீனதைபே), ஒகுஹரா (ஜப்பான்), சென் யூபே (சீனா) உள்ளிட்டோர் கடும் போட்டி அளிக்க காத்திருக்கிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜப்பானின் கென்டோ மோமோட்டா பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சாய் பிரனீத் ஆகியோர் களம் காணுகிறார்கள். இவர்களில் 10-ம் நிலை வீரரான ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் அயர்லாந்து வீரர் நாட் நுயேனுடன் சவாலை தொடங்குகிறார்.

சமீபத்தில் தாய்லாந்து ஓபன் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்த இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி காயம் காரணமாக விலகி விட்டது. அதே சமயம் பெண்கள் இரட்டையரில் அஸ்வினி-சிக்கி ரெட்டி உள்பட 3 இந்திய ஜோடி கலந்து கொள்கிறது.

Tags: sports news